Thursday, April 5, 2012

கடவுச்சீட்டு (Passport)




ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியம்.
விண்ணப்பம்
வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பிக்கும் போதே, கடவுச் சீட்டுக்கும் விண்ணப்பத்திட வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பதற்றத்தையும் ஓரளவு தவிர்க்க முடியும். சமீபகாலமாக ஒவ்வொரு மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுப் பிரிவில் பெறலாம்.
ஆவணங்கள்
முக்கியமாக இரண்டு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
1.    இருப்பிடச் சான்றிதழ், 2. பிறப்புச் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டலாம்.
பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை,அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாகக் காட்டலாம்.
சனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.
விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்
கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.
சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின்,தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.
பொதுவாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு,அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே கடவுச்சீட்டு வழங்குவர்.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரேகடவுச்சீட்டு அளிப்பர்.
கட்டணம்
பொதுவாக சாதாரண கடவுச்சீட்டு பெற
ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ கடவுச்சீட்டு பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜம்போ கடவுச் சீட்டு – அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக்கூடியது. சிறுவர் சிறுமியர்க்கு கட்டணம்
ரூ. 600/-.
தத்கல் திட்டம்
பொதுவாக, கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு விடுகின்றன.
அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து கடவுச்சீட்டு பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து கடவுச்சீட்டு பெற முடியும்.
காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட (கடவுச்சீட்டு உடைய பெற்றோர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று  பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களதுதுணைவியர் மற்றும் கடவுச்சீட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
அவ்வாறு விரைந்து கடவுச் சீட்டு பெற விழைவோர் ரூ.2500/-கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
புதுப்பித்தல்
கடவுச்சீட்டு பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு
ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
1. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சாஸ்திரிபவன்,நுங்கம்பாக்கம், சென்னை -34.
2.    மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், டபிள்யூ.பி. சாலை,திருச்சி – 620 008.
மேலும், புதுவையிலும், மதுரையிலும் கடவுச்சீட்டு விண்ணப்பம் பெறும் மையங்கள் உள்ளன.
1.     பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், ஒருங் கிணைந்த கோழிப்பண்ணை மேம்பாட்டுத் திட்டக் கட்டடம், கால்நடைப் பராமரிப்புத்துறை வளாகம், மறைமலை அடிகள் சாலை, புதுவை– 605001.
2.     பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், மதுரை – 625 001.
மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவிநாசி சாலை,உப்பிலிபாளையம், கோவை.
இணையத் தளங்கள் வழியாகவும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். முகவரிகள் :
htttp:passport.tn.nic.in, http://passport.gov.in/
விண்ணப்பங்களை மேற்கண்ட அலுவலகங் களிலோ அல்லது,மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலோ அல்லது முகவர்களிடமோ சமர்ப்பிக்கலாம். கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் மடிப்பிதழிலேயே அனைத்து விபரங்களும் உள்ளன.
திரு. S. சசிக்குமார், IFS
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இவரது சொந்த ஊர். தந்தை திரு. சங்கரன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். தாய் திருமதி. காந்தாமணி, கோவை மாவட்ட பதிவாளர் பணியில் இருக்கும் திருமதி. மீனாகுமாரி இவரது மனைவி ஆவார். இரு குழந்தைகள் ரீது, ரீவா.
அரசுப்பள்ளியில் பள்ளிப் படிப்பும், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Agri) இளங்கலையும், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில்M.Sc. (Agri) முதுகலையும், இந்திய விவசாய தொழில்நுட்பக் கல்லூரியில் Phd யும் முடித்தவர்.2001லிருந்து இந்திய அரசுப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். மாவட்ட வன அலுவலராக மேற்கு வங்கத்திலும்,டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தில் இரண்டு ஆண்டுகளும், பொதுநல அமைச்சகத்தில் ஒரு வருடமும் பணிஅனுபவம் பெற்று தற்பொழுது கோவை மண்டல கடவுச்சீட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரக்கூடியவர்.

No comments:

Post a Comment