Friday, September 28, 2012

தெற்கு ரயில்வேயில் வேலை


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மற்றும் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் காலியாக உள்ள 2,461 காலிப்பணியிடங்களில், பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயில் ஸ்வீப்பர்  கம் போர்ட்டர், டிராக்மேன், ஹெல்பர் கிரேடு 2 (எலெக்ட்ரிக்கல்), ஹெல்பர் கிரேடு 2 (மெக்கானிக்கல் ), ஹெல்பர் கிரேடு 2 (சிக்னல் அண்ட் தொலைத்தொடர்பு), ஹெல்பர் கிரேடு 2 (ஸ்டோர்ஸ்), உதவியாளர்கள் (அனைத்துப் பிரிவுகளுக்கும்), மருத்துவப் பிரிவிற்கு சஃபைவாலா போன்ற பிரிவுகளிலும், இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் டிராக்மேன், ஹெல்பர் கிரேடு , வெண்டர், பியூன், சானிட்டரி கிளீனர் போன்ற பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான கல்வித் தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்கள் எப்படித் தேர்வு செய்யப் படுவார்கள்?

காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மட்டும் (அதாவது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் இருந்து மூன்று மடங்கு பேர்) உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவத்  தகுதி சோதனைக்குப் பிறகு காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

பெட் (பிசிக்கல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று அழைக்கப்படும் இந்த உடற் தகுதித் திறன் தேர்வு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆண் விண்ணப்பதாரர்களாக இருப்பின் 1,500 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். பெண் விண்ணப்பதாரர்களைப் பொருத்தவரையில் 400 மீட்டர் தூரத்தை 3 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?

எழுத்துத் தேர்வு மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும்.  கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். கேள்விகள் பத்தாம் வகுப்புத் தரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். பொது அறிவு, கணிதம், அனாலிசிஸ், ஆங்கிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள். கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான மொழியை தேர்வு செய்து விடையளிக்கலாம். தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப் பெண்கள் உண்டு. 3 தவறான கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு வரை ரயில்வே துறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள்  முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலேயே இருந்தன. இதனால், தமிழ்வழிக் கல்வியில் படித்து வந்த மாணவர்கள் இந்தக் கேள்விகளைப் புரிந்து விடையளிக்க சிரமப்பட்டே வந்தனர். ஆனால், தற்போது கேள்விகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருவதால், தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்கு தேர்வு எளிமையாக இருக்கும்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 33 வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 - 36 வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 முதல் 38 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் கேஷுவல் மற்றும் சப்ஸ்டிட்யூட் தொழிலாளர்கள் உட்பட குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்  பணியாற்றிவரும் தொழிலாளர்கள் பொதுப்பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 40 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 43 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் 43 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 46 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 48 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்:

ரூ.40 தேர்வுக்கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. The Assistant  personal officer/ Recruitment, RRC, Chennai – 600008  என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கோடிட்ட வரைவோலை அல்லது அஞ்சலகத்திலிருந்து பெறப்பட்ட கோடிட்ட இந்திய அஞ்சல் ஆணை வடிவில் செலுத்த வேண்டும். இந்திய  அஞ்சல் ஆணை அல்லது வங்கி வரைவோலை கண்டிப்பாக தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான போது அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்டதாக இருக்க வேண்டும். தேர்வு அறிவிப்புக்கு முன்பாக வரைவோலை எடுத்திருப்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வங்கி வரைவோலை அல்லது இந்திய அஞ்சல் ஆணையில் பெயருக்கான இடத்தில் மற்றும் காசோலையின் பின்புறம் வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

மணி ஆர்டர், காசோலை, அஞ்சலகம் வழங்கும் சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் கட்டண ஸ்டாம்பு அல்லது மற்ற எவ்விதமான முறையில் கட்டணம் செலுத்தினாலும் அது நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி?

ஒரு விண்ணப்பதாரர்  ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பல விண்ணப்பங்களை அனுப்பினால் அது ஏற்கப்படாது. ஒருவேளை பல விண்ணப்பங்கள் அனுப்பி, ஒரு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒரு காரணத்திற்காக பணி நியமனம் செய்யப்படாமல் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பப் படிவத்தை நீலநிற அல்லது கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர், பின்கோடுடன் கூடிய முகவரி, பிறந்த நாள், தந்தையின் பெயர் மற்றும் அருகாமையிலுள்ள ரயில் நிலையம் முதலியவற்றை கேப்பிட்டல் எழுத்துக்களில் எழுத வேண்டும்.

விண்ணப்பதாரர் தங்கள் உடலிலுள்ள ஏதாவது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் அடையாளம் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும். அடையாளம் பற்றிக் குறிப்பிடும் பத்தியை தெளிவாகப் பூர்த்தி செய்யாமல் விடும் விண்ணப்பதாரரின் விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும். தெளிவில்லாத, சரியாகப் பூர்த்தி செய்யாத, கையொப்பம் போடப்படாத, தகுந்த வடிவத்தில் இல்லாத, புகைப்படம் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:

விண்ணப்பத்துடன் பிறந்த தேதி சான்றின் நகல், கல்வித் தகுதிக்கான நகல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிள் சாதிச் சான்றிதழின் நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் பணிவிடுப்புச் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை தெற்கு ரயில்வே இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்று அரசு வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மாணவர்கள், அரசு வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்காக போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள், மத்திய அரசுத் துறைகளின் ஒரு முக்கிய அங்கமான ரயில்வே துறையில் பணியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 25-09-2012
விவரங்களுக்கு : www.rrcchenai.org.in