Tuesday, August 16, 2011

முதலீட்டாளர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை

உலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள் -. (நன்றி - பல இணைத்தளங்கள்)

இதைப் படிப்பதற்கு முன்னால், உங்களுக்கு உண்மையிலேயே பங்குச்சந்தையில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளதா? நீங்கள் முதலீட்டாளராக (investor)விரும்புகிறீர்களா அல்லது ஊகத்திறனைப் பயன்படுத்தி, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்க விரும்புபவரா (Speculator) என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இரண்டும் வேறுவேறானவை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது என்பது ஒரு கலை. சில விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய விளையாட்டு. ஆனால், speculation என்பது கிட்டத்தட்ட சூதாட்டம். சரி, தவறு, இப்படித்தான் செய்யவேண்டும் என்றெல்லாம் அதில் இல்லை. உங்களுக்கு யூகிக்கின்ற திறனும் இருந்து, அதிர்ஷ்டக் காற்றுமிருந்தால் லாபம் கொட்ட வாய்ப்புண்டு.

இப்பொழுது வாரன் பஃபெட் என்ன சொல்கிறார் என்று கேட்போமா?

முதலீட்டாளர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை 'உங்களுக்குப் புரியாத எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாதீர்கள்' என்பதுதான். ஒரு தொழில் குறி
த்த அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே, அதனைப் புரிந்துகொண்டு, இறங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும். குருட்டாம்போக்கில் முதலீடு செய்தால் பலனும் அதற்கேற்றாற்போல்தான் இருக்கும் என்பதுதான் இந்த அறிவுரையின் சாரம்.

இரண்டு: பொதுவாக எல்லோரும் கூறும் அறிவுரை 'அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே!' என்பதுதான். ஆனால் வாரன் பஃபெட், இதில் மாறுபடுகிறார். 'சில குறிப்பிட்ட வகை பிடிமானங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தன்னால் இழப்பு ஏற்படும் அபாயம் குறையும். முதலீட்டாளர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல், பங்கு வர்த்தகத்தில் இறங்கினால் மட்டுமே, இத்தகைய Diversification அதாவது பலவகையான பங்குகளில் பணத்தைப் பிரித்துபோடுதல் அவசியம் என்பது அவர் கருத்து.

பொதுவாகப் பங்குகளை வாங்குகையில், தற்போதைய லாபத்தை மட்டும் பார்க்காமல், பொதுவாக அந்த நிறுவனங்களின் லாபம் ஈட்டும் தன்மை, கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி லாபம் இவற்றையும், அந்த நிறுவனங்களுடைய கூட்டு நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் பெயரில் வணிகம் புரிய உரிமம் பெற்றவர்கள் இவற்றைக் குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொண்டு செயல்புரிவது நல்லது என்பது அவரது அடுத்த அறிவுரை. அத்துடன், முதலீட்டு முடிவுகளின் பொழுது, ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கும் அவர்களது ஆதாயத்திற்கும் உள்ள விகிதத்திற்கும் (Return on Equity) முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமே அல்லாமல், பங்குகளின் மீதான வருமானத்தைக் (Earning per share) கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கருதுகிறார்.

'மற்றவர்கள் உங்களுடன் ஒத்துப்போகிறார்களா இல்லையா என்பதை வைத்து உங்கள் முதலீடு சரியா தவறா என்று தீர்மானிக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் விவரங்கள், நீங்கள் முதலீடு செய்ததற்கான காரணங்கள் இவற்றை வைத்தே உங்கள் முடிவு சரி அல்லது தவறாகலாம். பிறர் அபிப்பிராயத்தால் அல்ல' என்று கூறும் அவர் மற்றவர்களுடன் ஒத்துப்போகாமல் இருப்பதே பலனளிக்கும் என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். 'மற்றவர்கள் எல்லாம் முதலீடு செய்ய அஞ்சுகையில் நீங்கள் துணிந்து முதலீடு செய்யுங்கள். மற்றவர்கள் துணிந்து முதலீடு செய்கையில் நீங்கள் விற்பனை செய்யுங்கள்.' என்பது அவர் காட்டும் வழி.

அது மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கு இருக்கவேண்டிய மனநிலை, குண நலன்கள் பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போமா?

1. உங்கள் முதலீட்டின் மதிப்பு ஐம்பது சதவீதத்திற்கும் கீழ் சரிகையில் கூட பீதியடையாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது என்றால் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இறங்கவே லாயக்கில்லை.
2. எதிலும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லது. ஆனால் பங்குவர்த்தகத்தில் அது உங்கள் எதிரி.
3. பங்கு வர்த்தகத்தில் சில கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வருகையில் அவற்றை ஒதுக்கும் மனவலிமையே ஒரு முதலீட்டாளருக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது.
4. பெரும்பாலான முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக வாங்கி, விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாததாலேயே நட்டத்தை அடைகிறார்கள். பெரும்பான்மையான லாபம், பங்குச்சந்தையில் செயல்படாதபொழுதுதான் கிடைக்கிறது. (அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட காலம் வரை இருக்கட்டும் என்று முதலீடு செய்கிறீர்கள். நடுவில், சில காரணங்களுக்காக அவற்றை விற்பது, அதன் விலை மாறுபாட்டில் பயந்துகொண்டு விற்றுவிட்டு வேறொன்றில் முதலீடு செய்வது இவை, சரியான முறையில் கணக்கிடாவிடில் நட்டத்தைத் தூண்டிவிடும். பொறுத்தார் பூமியாள்வார் என்ற தமிழ்ப்பழமொழியையே வாரன் பஃபெட் தனது பாணியில் சொல்கிறார்.
5. கொஞ்சம் அசட்டை, மந்தமாக இருத்தல் இவை கூட முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக்குணங்கள் என்பது இவர் கருத்து. ஏனெனில், முதலீட்டாளர்கள் 'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்' காத்திருக்கும் கொக்குப்போல் இருக்க வேண்டியவர்கள். மிகவும் பரபரப்பாகச் செயல்படுவது, எதிர்பாராத நட்டங்களை உண்டாக்கலாம்.
6. கன்னாபின்னாவென்ற ஊசலாட்டங்கள், அதில் முதலீடு செய்பவர்களின் தாக்கத்தாலேயே உண்டாகின்றன, அந்தந்த நிறுவனங்களின் லாபநட்டங்களால் அல்ல. எனவே அவற்றைக் கண்டு குழம்பவேண்டுவதில்லை.
7. ஒரு முதலீட்டாளர் எல்லா முடிவுகளையும் சரியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. பெரும் தவறான முடிவுகளைச் செய்யாமல் இருந்தால் போதுமானது.
8. ஒரு முதலீட்டைச் செய்கையில், அந்த வாணிபத்தையே விலைக்கு வாங்குவது போல் நினைத்து முதலீடு செய்யுங்கள். பங்குகளை குத்தகைக்கு எடுப்பதுபோல் நினைக்காதீர்கள். (முழு ஈடுபாட்டுடன் அந்த நிறுவனத்தைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்)

இவையெல்லாம் பொதுவாக நாம் கேட்கும், படிக்கும் பங்குச்சந்தை குறித்த ஆலோசனைகளுக்கு முரணாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் இவை பங்குச்சந்தையில் மேதையான ஒருவரின் கருத்து. சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால்.... வெற்றி உங்கள் பக்கம்.